ஒன்ராரியோ பழமைவாத கட்சிக்கான தலைவர் தேர்தல்: வாக்களிக்க ஒன்பதாயிரம் தமிழர்கள் தகுதி Share

ஒன்ராரியோ பழமைவாத கட்சிக்கான தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

 

மே 3ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வாக்களிப்பிற்காக தலைவர்கள் அனல் கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பலர் போட்டிக்களத்தில் இருந்தாலும் தற்போது இறுதிக்களத்தில் இருவரே உள்ளனர். கடசியின் உபதலைவரும் தற்போதைய ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினருமான கிரிஸ்டின் எலியட் அவர்களும் இபரி தொகுதி கனடிய பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுனுமே இறுதிப் போட்டியில் உள்ளனர்.

நடைபெறவுள்ள தேர்தல் குறித்து கட்சியின் தலைமையகத்துடன் பேசிய போது பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

மே 3ஆம் திகதி காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரையும், மே 7 ஆம் திகதி பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 9 மணிவரையும் கட்சி அங்கத்தவர்கள் தலைவரை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கலாம்.

வெற்றி பெற்றவர் விபரம் மே 9ஆம் திகதி அறிவிக்கப்படும். 76 ஆயிரம் கட்சி அங்கத்தவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதில் 14 ஆயிரம் தமிழர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை போட்டியில் உள்ள இரு தரப்பும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த தலைவர் தேர்தலில் ஆயிரத்திற்கும் குறைவான தமிழர்களே பங்கு பற்றிய நிலையில் தற்போது மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்களாக இருப்பது தமிழர்களின் அரசியல் பலத்தை காட்டுவதாக அமைந்துள்ளதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழர்கள் போன்றே சீக்கிய இனத்தவர்களும் பெருமளவில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகை தகவலின் படி, பிரவுன் அவர்களே முன்னிலையில் நிற்பதாகவும், கிறீஸ்ரீன் எலியட் அவர்கள் ஒன்ராறியோ மாகாணத்தின் புரகிரசிவ் கட்சித் தலைமையைத் தாங்கும் தகுதியை இழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை குளோப் அன்ட் மெயில் பத்திரிகையானது பற்றிக் பிரவுன் அவர்கள் இந்தியப் பிரதமர் மோடியை தனது தனிப்பட்ட நிகழ்விற்கு அழைத்து வந்தது கிறிஸ்ரீன் எலியட்டிற்கு கொடுத்த பெரிய அடி என்றும், பற்றிக் பிரவுனிற்கான நிதி வழங்குனர்கள் பலர் பற்றிக் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தொகுதி வாரியாக எவ்வளவு வாக்குகள் அளிக்கப்பட்டாலும் அவை வெறும் 100 வாக்குகளாகவே கணிக்கப்படும். அந்தவகையில் 107 தொகுதிகளுக்குமாக 10700 புள்ளிகள் கிடைக்கும். யாரொருவர் 5351 புள்ளிகளைப் பெறுகின்றாரே அவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.

ஆகவே வெறும் அங்கத்தவர் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் ஒருவர் வெற்றி பறமுடியாது அவர் அனைத்துத் தொகுதிகளிலும் அங்கத்தவர்களை கணிசமாக கொண்டிருப்பது அவசியம்.

இந்தவகையில் பத்திரிகைக் கணிப்புக்களின் படி பற்றிக் பிரவுனே 7 வீத புள்ளிகளை அதிகமாகப் பெற்று முண்ணனியிலுள்ளார். அத்துடன் தமிழர்கள் சார்ந்து தனது ஆதரவை பற்றிக் பிரவுண் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வருவதுதன் காரணமாக தமிழர்களைச் சுற்றி தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..